பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது-குஷ்பு உள்ளிட்ட தலைவர்களுக்கு பொறுப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து தமிழ் நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது பாஜக மாநில தலைவர், மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு பாஜகவின் 19 அமைப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் மொத்தம் 50 நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அந்த பட்டியலின்படி, மாநில பொதுச் செயலாளராக (அமைப்பு) கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் துணைத் தலைவர்களாக வி.பி. துரைசாமி, கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலச் செயலாளர்களாக அஸ்வத்தாமன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பொதுச் செயலாளர்களாக ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைமைச் செய்தித் தொடர்பாளராக நாராயணன் திருப்பதியும் மாநில பிரிவு அமைப்பாளராக கே.டி. ராகவன் மற்றும் எம். நாச்சியப்பன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கே.டி. ராகவன் 2021 ஆம் ஆண்டு எழுந்த சர்ச்சை தொடர்ந்து தான் வகித்த பாஜக மாநில பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில் புதிதாக வெளியிட்டுள்ள நிர்வாக பட்டியலில் அவருக்கு மாநில பிரிவு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது
மேலும் மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர், மாநில இளைஞரணித் தலைவராக எஸ்.ஜி. சூர்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.