வேகமாக பரவி வரும் #Monkeypox : மத்திய அரசு அவசர ஆலோசனை!
குரங்கம்மை கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை பரவி வரும் நிலையில், நாட்டில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்து விமான நிலையங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, துறைமுகங்களில் எச்சரிக்கை மற்றும் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு போன்றவற்றை உருவாக்குவது குறித்தும், குரங்கம்மை பரவினால், நோயாளிகளை தனிமைப்படுத்துவது, சோதனைக் கூடம் உள்ளிட்ட மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் இன்று நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கமாக, குரங்கம்மை என்பது இரண்டு முதல் நான்கு வாரங்களில் கட்டுப்பட்டுவிடும், தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகளுடன் நலமடைந்துவிடுவார்கள், குரங்கம்மை பாதித்தவர்களுடன் பாலியல் உறவு, நோயாளியின் உடலில் இருக்கும் புண்களின் தண்ணீர் படுவது, அவர்களது அழுக்கான துணிகளை தொடுவது போன்றவற்றால்தான் அது மற்றவருக்கு பரவும் என்றும் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : #THEGOAT ட்ரெய்லர் : 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரல்!
ஆப்ரிக்கா உள்பட புதிதாக நான்கு நாடுகளில் குரங்கம்மை வேகமாகப் பரவி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பினால் குரங்கம்மை, உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள் வரை இந்தியாவில் குரங்கம்மை பரவியதாக எந்த தகவலும் இல்லை.
வரும் வாரங்களில், வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம், நாட்டுக்குள் குரங்கம்மை பரவும் அபாயம் உள்ளதால், தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், காங்கோ மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு உரிய சோதனைகள் நடத்தவும் விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.