நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரும் மத்திய அரசு?
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே பணியிட மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா கடந்த ஏப்ரல் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும் வரை, நீதிபதி யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும், அவருக்கு எந்த நீதித்துறைப் பணியும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பித்தது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த அறிக்கையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார்.
இந்த நிலையில், மத்திய அரசு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் வரவுள்ள மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.