"நாகர்ஜூனாவை பணத்தால் வாங்க முடியாது" - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் 'கூலி' பட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,
"கைதி படம் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ்க்கு போன் செய்து வாழ்த்தினேன். அவரை வீட்டுக்கு அழைத்து கதை கேட்டேன். இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை சொல்ல வந்தபோது நான் கமல் ரசிகன் என்றார். கதையை சொல்ல சொன்னால் கமல் ரசிகன் என்கிறாரே என நினைத்தேன். விக்ரம் முடிந்தபின் அவரை அனுப்பி வைப்பதாக கமல் சொன்னார். அவரை மிஸ் பண்ணக்கூடாது என நினைத்தேன். முதலில் ஒரு கதை சொன்னார். அந்த கதையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கலாம் படுத்துக் கொண்டே அடிக்கலாம். பின் ஒரு மாதம் கழித்து வந்து அந்த கதையில் நிறைய ஆர்டிஸ்ட் வேற கதை சொல்வதாக சொன்னார்.
முதலில் இந்த படத்திற்கு தேவா என்று டைட்டில் வைத்திருந்தோம். பின்னர் பெயர் மாறியது. கூலி படம் ஆர்கானிக்காக உருவானது. இந்த படத்தின் உண்மையான ஹீரோ இயக்குனர்தான். அனிருத் பாடல்கள், இயக்குனர் பேட்டி நல்ல பிரமோஷனை கொடுத்தது. நான் 1950 மாடல், லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருக்கிறேன். பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள். எனவே என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டர் சாண்டியிடம் சொன்னேன்.
லோகேஷிடம் மற்ற படங்கள் பான் இந்தியா ஹிட் ஆகுது இந்த படத்தை பான் இந்தியா அளவில் எடுங்கள் என்று சொன்னேன். ரிலீஸ் தேதியை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றேன். லோகேஷ் கனகராஜ் 2 மணி நேரத்திற்கு கொடுத்த பேட்டியை உட்கார்ந்து பார்த்தேன் முடியல, படுத்து பார்த்தேன் முடியல தூங்கி எழுந்து பார்த்தேன் அப்போதும் முடியல. லோகேஷ் தான் உண்மையான ஹீரோ. அனிருத் தான் இந்தியாவின் முதல் ராக்ஸ்டார்.
நான் 40, 45 வயசுலதான் இமயமலை போனேன். அவர் இப்பவே அமைதி தேடி போகிறார். அவர் எப்படிப்பட்ட ஆளு பாருங்க. அவர் இந்தியாவி்ன் ராக் ஸ்டார். அவரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம். நான் லேட்டாக சென்றதால் சவுபின் டான்சை பார்க்க முடியவில்லை. எந்த இயக்குனராக முதல் ஷாட்டை பிணத்துக்கு மாலை போட சொல்லி எடுப்பார்களா? லோகேஷ் அதை செய்தார்.
எனக்கும் சத்யராஜூக்கும் கருத்து ரீதியான முரன்பாடு இருக்கலாம். ஆனால் அவர் தன் மனதில் பட்டதை பேசிவிடுவார். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலாம். ஆனால் உள்ளே வைத்துக் கொண்டிருப்பவர்களை நம்ப முடியாது. சிவாஜி படத்தில் எனக்கு இணையான சம்பளம் தருவதாக சொன்னார். அவர் ஒப்புக்கொள்ளவி்ல்லை. இந்த படத்தில் அவர் நடித்தது பெரியவிஷயம். அமீர்கான் இந்தியில் கமல்ஹாசன் மாதிரி. அவரிடம் கதை சொல்லி, ஓகே வாங்க சில ஆண்டுகள் பிடிக்கும்.
அவர் நடித்தது பெரிய விஷயம். வில்லனாக நாகர்ஜூனா வருகிறார். அவரை பணத்தால் வாங்க முடியாது. அவரும் எத்தனை காலம்தான் நல்லவனாக இருப்பது என வில்லனாக மாறிவிட்டார். கமலே வியக்கும் அளவுக்கு அவர் நடித்துள்ளார். நீங்க என்ன கலரு, என்ன இளமை எனக்கு முடி கொட்டி விட்டதே என அவரிடம் கேட்க, ஜஸ்ட் எக்ஸ்சர்சைஸ் என்றார். மாலை 6.30க்கு மேல் உணவு சாப்பிட மாட்டேன் என்றார். நான் உடலை தண்டிக்காவிட்டால், அது நம்மை தண்டித்துவிடும். நம் உடலுக்கு எது ஒத்துக்கொள்ளாதது என தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மரம் சாயும்போது ரசிகர்கள் தாங்கிபிடிக்கிறீர்கள், உங்க பாதம் தொட்டு வணங்க வேண்டும். என் வெற்றிக்கு ரகசியம் உழைப்பு மட்டுமல்ல, ஆண்டவன் குரல். உனக்கு உன் குரலே கேட்கும், உன் குரலையும், ஆண்டவன் குரலையும் பிரித்து பார்க்க கற்க வேண்டும். எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.