‘அம்மா, நான் (சிப்ஸ் பாக்கெட்டுகள்) திருடவில்லை’... இறந்த மகனின் கடிதத்தை பார்த்து கதறிய தாய் - நடந்தது என்ன?
மேற்கு வங்காளம் மெதினிபூர் மாவட்டம், பன்சுகுரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ் (13). இவர் பகுல்டா கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணேந்து, சுபாங்கர் தீட்சித் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
தீட்சித் கடையில் இல்லாதபோது கிருஷ்ணேந்து ரூ.5 ரூபாய் மதிப்புள்ள 3 சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ணேந்துவை பின்தொடர்ந்து சென்ற தீட்சித் சம்பவம் குறித்து கேட்டுள்ளார். உடனே கிருஷ்ணேந்து ரூ.20-ஐ தீட்சித்திடம் தந்துள்ளான். ஆனால் அவனை கடைக்கு அழைத்து சென்று பாக்கி ரூ.5 சில்லறையை கொடுத்த தீட்சித், கிருஷ்ணேந்துவை அனைவரும் முன்பும், அடித்து மன்னிப்பு கேட்க வைத்தாக கூறப்படுகிறது.
இதனை வீட்டிற்கு சென்று தன் தாயிடம் கிருஷ்ணேந்து கூறியுள்ளான். இதனையடுத்து கிருஷ்ணேந்துவை கூட்டிக் கொண்டு கடைக்கு சென்ற அவனின் தாய், கடை உரிமையாளரிடம் சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு வந்து சிறுவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணோந்து பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளான்.
இதனையடுத்து சிறுவனை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். கடைக்காரர் திட்டியதால்தான் சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்டான் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தனது தாய் தன்னை திட்டியதும் மனதளவில் கிருஷ்ணேந்துவை பாதித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சிறுவனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார், அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே கிருஷ்ணேந்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் ஒரு கடித்ததை எழுதி வைத்துள்ளான். அதில் ‘அம்மா, நான் திருடவில்லை’ என எழுதி வைத்துள்ளான். இதனை படித்த அவரது தாய் கதறி அழுதுள்ளார்.