ஒடிசாவின் முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்பு!
ஒடிசாவில் முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இந்நிலையில் இன்று புவனேஸ்வரில் நடந்த பதவியேற்பு விழாவில், ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக பிரவதி பரிதா மற்றும் கே.வி.சிங் தியோ பதவியேற்றனர்.
இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் ரகுபர் தாஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்களோடு 13 பேர் அமைச்சர்களும் பதவியேற்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த 25 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல்முதலாக பாஜக ஆட்சி ஒடிசாவில் அமைந்துள்ளது.