For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தியதாகக் கூறப்படும் மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல் காந்தி கேள்வி

04:20 PM Jun 20, 2024 IST | Web Editor
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தியதாகக் கூறப்படும் மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை  ராகுல் காந்தி கேள்வி
Advertisement

ரஷ்யா-உக்ரைன் போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.  ஆனால் அவரால் வினாத் தாள் கசிவை நிறுத்த முடியவில்லை அல்லது அவர் நிறுத்த விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisement

மருத்துவப் படிப்புகளில் மாணவ,  மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும்,  ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.  ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.  இதனிடையே,  இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.

இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது,

"நீட் தேர்வை தொடர்ந்து யுஜிசி நெட் தேர்விலும் வினாதாள் கசிவு ஏற்பட்டது.  அவை கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பாரத் ஜாடோ யாத்திரையின் 2-வது பயணத்தின் போது,  ராஜஸ்தான் மாநிலம் வழியாக  நான் சென்ற போது சில மாணவர்கள் நீட் போன்ற பல தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக என்னிடம் தெரிவித்தனர்.  இது போன்ற முறை கேட்டால் மாணவர்கள் மிகவும் பாதிக்கின்றனர்.  குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இது அதிகம் நடைபெறுகிறது.  கடந்த 7 வருடங்களில் 70க்கும் மேற்பட்ட முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது.

2 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவோம்.  ரஷ்யா-உக்ரைன் போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.  தொடர்ந்து வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது. ஆனால் சில காரணங்களால் பிரதமர் மோடியால் அதனை நிறுத்த முடியவில்லை அல்லது அவர் நிறுத்த விரும்பவில்லை.  முதலில் இந்தியாவில் தேர்வு வினாத்தாள் கசிவை நிறுத்துங்கள்.  பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.  இந்த முறை தனி பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க முடியாததால் அவர் குழம்பி போய் இருக்கிறார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement