உக்ரைன் சென்ற மோடி...ஆரத்தழுவி வரவேற்ற ஜெலன்ஸ்கி!
உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆரத்தழுவி வரவேற்றார்.
அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி போலந்தைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கைகொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை மோடி பார்வையிட்டார். முன்னதாக கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவுக்கும், உக்ரைனுக்கும் தூதரக உறவுகள் ஏற்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு உக்ரைனுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இதன் மூலம் உக்ரைன் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருக்கிறார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், 'இது போருக்கான காலமல்ல அமைதிக்கான காலம்' என்பதை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இருநாடுகளிடையுமே நட்புறவை மேம்படுத்தி வருகிறது.
முன்னதாக கடந்த மாதம் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாமிடிர் புதினை கட்டிப்பிடித்ததற்காக அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.