“மோடியும், அமித்ஷாவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடினர்!” - மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் விதிஷா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தீர்கள், நீங்கள் பாஜகவைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதன்பிறகு, பாஜக தலைவர்கள் -- நரேந்திர மோடி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அமித் ஷா -- எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் திருடினார்கள். அப்படி அமைக்கப்பட்டது தான் மத்தியப் பிரதேச அரசு.
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவை காங்கிரஸ் விரட்டியடிக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்துப் போராடுகிறோம். கர்நாடகாவில் அவர்களை விரட்டியடித்தோம். ஹிமாச்சலப் பிரதேசத்தில் அவர்களை விரட்டியடித்தோம். ஆனால் வெறுப்புடன் அல்ல. நாங்கள் அகிம்சையின் வீரர்கள். அடிக்க மாட்டோம். ஆனால் நாங்கள் அவர்களை அன்புடன் விரட்டியடித்தோம். இங்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 145 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.