மோடி 3.0 - மீண்டும் வாய்ப்பளிக்கப்படாத 37 அமைச்சர்கள்!
மத்திய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சரவையில் முந்தைய அமைச்சா்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர். இதனால் டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. அதன்படி, புதிய அமைச்சரவையில் முன்னாள் முதலமைச்சர்களான சிவராஜ் சிங் செளஹான் (ம.பி.), மனோகா் லால் கட்டா் (ஹரியானா), எச்.டி.குமாரசாமி (கா்நாடகா) உள்பட 33 புதுமுக அமைச்சர்களும், நிா்மலா சீதாராமன், அன்னபூா்ணா தேவி, ஷோபா கரந்தலஜே, ரக்ஷா கட்ஸே, சாவித்ரி தாக்கூா், நிமுபென் பம்பானியா, அனுப்ரியா படேல் ஆகிய 7 பெண் அமைச்சா்களும் இடம்பெற்றுள்ளனா். முந்தைய அமைச்சரவையில் 10 பெண் அமைச்சா்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், புதிய அமைச்சரவையில் முந்தைய அமைச்சா்களான ஸ்மிருதி ரானி, அனுராக் தாக்கூா், அா்ஜுன் முண்டா, பா்சோத்தம் ரூபாலா, ஆா்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகா், நிஷித் பிரமாணிக், பிரதிமா பெளமிக், மீனாட்சி லேகி உள்பட 37 பேருக்கு மீண்டும் அமைச்சா் பதவி அளிக்கப்படவில்லை.
இவா்களில் 18 போ் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள். தோ்தலில் தோல்வியடைந்த நிலையிலும், மத்திய அமைச்சராக மீண்டும் நியமனம் பெற்ற ஒரே நபா் எல்.முருகன். இவா், ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். இதனிடையே, பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டம் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.