அடுத்த 3 மணி நேரத்திற்கு... சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...
அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், இன்று முதல் ஐந்து தினங்களுக்கு தென் தமிழ்நாடு பகுதிகளில் அனேக இடங்களிலும் வட தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இன்று முதல் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் கனமழையும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிக கனமழையும் பெய்யும் எனவும் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.