தீக்குச்சிகளை வைத்து ராமர் கோயில் மாதிரி - ஒடிசா கலைஞர் அசத்தல்.!
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு தீக்குச்சிகளை வைத்து ராமர் கோயில் மாதிரியை ஒடிசா கலைஞர் அசத்தியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தை சார்ந்த கைவினைக் கலைஞரான சஸ்வத் ரஞ்சன் தீக்குச்சிகளை பயன்படுத்தி அயோத்தி ராமர் கோயிலின் மாதிரியை உருவாக்கி அசத்தியுள்ளார். அவர் தயாரித்துள்ள இந்த தீக்குச்சிகளால் ஆன ராமர் கோயில் மாதிரி படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.