சென்னை திரும்பினார் முதலமைச்சர் #MKStalin - நேரில் சென்று வரவேற்றார் செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வரவேற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று (செப். 26) மாலை புறப்பட்டு சென்றார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு காவல் படையினர் மரியாதை அளித்தனர்.
டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ஆம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு மாலை 5.35 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று (செப். 26) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நேற்று (செப். 27) இரவு 7 மணியளவில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் அவரை மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, இன்று (செப். 27) மாலை செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று இரவு 7 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வரவேற்றார்.
பின்னர் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து செந்தில் பாலாஜி புகைப்படம் எடுத்து கொண்டு வாழ்த்துப் பெற்றார்.