அதிக போதைக்காக கலக்கப்பட்ட மினரல் டர்பன்டைன் ஆயில் - குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்!
அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக குற்றவாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.
இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் நேற்று (ஜூன் 21) உயிரிழந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடிய சுப்பிரமணி என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31பேர், சேலம் மருத்துவமனையில் 16பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4பேர், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3பேர் என மொத்தம் 54பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பெண் உட்பட ஏற்கெனவே 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் சந்திரா, சூசை, ரமேஷ் மற்றும் மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷச்சாராயத்தில் பீங்கான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மினரல் டர்பன்டைன் ஆயில் கலக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் மினரல் டர்பன்டைன் ஆயிலை வாங்கி சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருத்தாச்சலத்தில் உள்ள பீங்கான் தொழிற்சாலைக்கும் மினரல் டர்பன்டைன் ஆயிலை சப்ளை செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விருத்தாச்சலத்தில் உள்ள இரு பீங்கான் தொழிற்சாலைகளில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.