பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு! கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினார்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.