"தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும்" - வீரர்களை ஊக்குவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
"தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும்" என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் இந்த நிகழ்ச்சியில் மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள் : “அவரது நினைவுகளையும்,தேசபக்தியையும் வெள்ளித்திரையில் காண ஆவலாக இருக்கிறேன்.” – முகுந்த் வரதராஜன் மனைவி!
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
"மதுரை மண்ணில் இந்த அற்புதமான திட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க தொடங்கி வைப்பது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதி நூற்றாண்டினை சிறப்பித்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 12,620 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ.86 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க இருக்கின்றோம்.
கிராமப்புற விளையாட்டு திறமையாளர்களை கண்டறிய தான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை சென்ற ஆண்டு மிகச் சிறப்பாக நடத்தி முடித்தோம். இதில், 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் அதில் கலந்து கொண்டார்கள். ஏழை எளிய கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு உதவ தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி பல உதவிகளை செய்து வருகிறோம்.
கலைஞருடைய பெயரால் எத்தனையோ திட்டங்கள் இருந்தாலும், நம்முடைய விளையாட்டுத் துறை சார்பாக முதல்முறையாக கலைஞர் பெயரால் விளையாட்டுத் துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன்.
ஒரு விளையாட்டு வீரருக்கு நல்ல கூர்மையான அறிவுத்திறன் வேண்டும். தோல்வியிலும் துவண்டு விடாத மன திடம் வேண்டும். இதைவிட முக்கியம் நல்ல டீம் ஒர்க் வேணும். நல்ல டீம் அமைந்து விட்டாலே, பாதி வெற்றி பெற்று விட்டோம் என்று அர்த்தம். கலைஞருடைய பெயரால் வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய இளைஞர்களே நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான்.
கலைஞருக்கு இருந்த குணங்களை, அந்த திறமைகளை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது இங்கு வழங்கக்கூடிய விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நம் வீரர் வீராங்கனைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழிவகை செய்யப்படும்"
இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.