For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!

10:02 AM Dec 21, 2023 IST | Web Editor
அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு
Advertisement

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தண்டனை தொடர்பான உத்தரவு சற்று நேரத்தில் வெளியாகிறது.

Advertisement

இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை வழங்கப்பட்டால், சட்ட விதிகளின்படி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கில் உயர்நீதிமன்றம் தண்டனை அறிவித்தபின், அதன் விவரங்கள் தமிழ்நாடு சட்டசபை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தண்டனை விவரங்களுடன்,  அமைச்சர் பொன்முடியின் பதவி நீக்கத்திற்கான குறிப்புகளையும் உயர்நீதிமன்றம் குறிப்பிட வாய்ப்புள்ளது.

தனிக்குறிப்புகள் வழங்கப்படாவிட்டாலும்,  உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளை தமிழ்நாடு சட்டசபை செயலகம் ஆராயும்.  அதில் கூறப்பட்டுள்ளபடி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பொன்முடியை தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பாணையை சட்டசபை செயலகம் வெளியிடும்.

அந்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகே தகுதி இழப்பு அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.  அதன் பிறகு பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.  சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  அதனுடன் சேர்த்து இந்த இடைத் தேர்தலை நடத்தவும் அதிகம் வாய்ப்புள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தில் சிறை தண்டனை இல்லாமல் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டாலும் தகுதி இழப்பு செல்லும்.  சிறை தண்டனை பெற்றால் சம்பந்தப்பட்டவர் அந்த தண்டனையை அனுபவித்துவிட்டு விடுதலை ஆகும் நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.  அபராதம் மட்டும் விதிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement