“மக்களைத் தேடி” மருத்துவம் திட்டத்திற்கு ஐநா விருது - முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!
தமிழ்நாட்டின் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்திற்கு ஐ.நா அமைப்பு விருது அறிவித்துள்ளதாக அமைச்சசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
"தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக ஐநா அமைப்பின் விருது தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மக்களை தேடி மருத்துவம்‘ திட்டத்தை செயல்படுத்தியதற்காக கடந்த மாதம் 25-ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற 79வது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : AssemblyElections | ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்கு எண்ணிக்கை!
தமிழ்நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் பயனாளிகளின் இல்லங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 1,80,00,844 பயனாளிகள் முதல்முறை சேவைகளையும், 3,96,66,994 நபர்கள் தொடர் சேவைகளையும் பெற்று வருகின்றனர். சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள இந்த விருது தமிழ்நாடு அரசுக்கு மேன்மேலும் சிறப்புற செயல்படுவதற்கான புதிய உத்வேகத்தையும், அடுத்தகட்ட உயா்நிலையை அடைவதற்கான உந்துதலையும் அளித்துள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளபக்கத்தில்,
"இந்திய துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக, நமது அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் தேடிவந்துள்ளது. 1.80 கோடிக்கும் அதிகமான மக்கள் இதுவரை இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவர் இல்லத்துக்கும் சென்று மருத்துவ சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இந்த விருது. சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி, கண்காணித்து மேம்படுத்தி வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை செயலர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.