தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம் - நாளை மாலைக்குள் 90% முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தூத்துக்குடியில் மாநகரில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நாளை மாலைக்குள் 90% பணிகள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மேயர் ஜெகன், உள்ளிட்டோருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் - மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!
கூட்டத்திற்கு பின்னர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, 21 ராட்சத மின் மோட்டார்கள் மூலம் வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை மாலைக்குள் 90% பணிகள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.