ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா - அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!
தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆளுநரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பாபா சாகிப், அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆமி உ உபாத்யாத் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை வழங்குகிறார். விழா அழைப்பிதழில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பெயரும் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார். இன்றைய பட்டமளிப்பு விழாவில் 7,972 மாணவர்கள் பட்டங்களும், பட்டயங்களும் பெற உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 15 பேர் முனைவர் பட்டமும், 3098 பேர் முதுநிலை பட்டமும் 3 ஆயிரத்து 7 பேர் இளநிலைப் பட்டமும்,103 பேர் டிப்ளமோ, அஞ்சு பேர் முதுநிலை டிப்ளமோ,1744 பேருக்கு தொழிற்கல்வி பட்டயம் என 7972 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் 304 மாணவர்கள் நேரடியாக சான்றிதழ்களை பெறுகின்றனர். கனடாவின் வான்கூரில் அமைந்துள்ள காமன்வெல்த் கல்விக் கழகத்தின் ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்ப பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களின் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கும் பதக்கம் 2024 ஆம் ஆண்டில் முதுகலை கம்ப்யூட்டர் அறிவியல் மாணவி திவ்யா பெறுகிறார். கோயம்புத்தூரில் உள்ள கே பி ஆர் தொழிற்சாலையால் நடத்தப்படும் கேபிஆர் அறக்கட்டளை மூலம் படித்த மாணவர்களும் கலந்து கொண்டு விருதுகளை பெறுகின்றனர்.