மேற்குவங்க ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆறுதல்!
மேற்குவங்க ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரயில் பயணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரை பைலட் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரயில் பயணிகளை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.