இல்லாத துறைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் - சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அரசு விளக்கம் !
பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இல்லாத ஒரு துறைக்கு 20 மாதங்களாக குல்தீப் சிங் தலிவால் அமைச்சராக இருப்பது தெரியவந்துள்ளது. 2023 மே மாதம் அமைச்சரவை மாற்றத்தின் போது குல்தீப் சிங் தலிவாலிடம் இருந்த விவசாயிகள் நலத்துறை பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக நிர்வாக சீர்திருத்தத் துறை இலாகா வழங்கப்பட்டது.
வெளிநாடு வாழ் (பஞ்சாபி) இந்தியர்கள் விவகாரத் துறையும் அவர் வசம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 21) பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிப்பில், "வெளிநாடு வாழ் (பஞ்சாபி) இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சரான குல்தீப் சிங் தலிவாலுக்கு நிர்வாக சீர்திருத்தத் துறை ஒதுக்கப்பட்டது.
எனினும், நிர்வாக சீர்திருத்தத் துறை எனும் துறை இப்போது இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கடந்த 20 மாதங்களாக இல்லாத ஒரு துறையை நிர்வகித்து வந்ததை அரசே ஒப்புக்கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அம்மாநில மூத்த பாஜக தலைவர் பிரதீப் பண்டாரி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை கேலிக்குள்ளாகி உள்ளது. ஒரு அமைச்சர் இல்லாத துறையை நடத்துகிறார் என்பது கூட முதலமைச்சருக்கு தெரியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சர்ச்சை குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நேற்று (பிப்.22) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிர்வாக சீர்திருத்தத் துறை முந்தைய அரசாங்கங்களின் போது இருந்தது. ஆனால் நாங்கள் அதை மறுசீரமைத்துள்ளோம். முன்பு இது வெறும் பெயரளவிலான துறையாக இருந்தது. அதில் உண்மையான வேலை எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் அதை தற்போது மற்ற துறைகளுடன் இணைத்துள்ளோம்.
முன்னதாக வெவ்வேறு துறைகள் காரணமாக கோப்புகள் இங்கும் அங்கும் அனுப்பப்பட்டன. இதனால் வேலையில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நிர்வாக அமைப்பை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற, அது மற்ற துறைகளுடன் இணைக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.