கனமழை எதிரொலி | “#OnlineClass-களை தவிர்க்க வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு நாட்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று (அக். 15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும், நாளை (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : #TNRains | வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்!
கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்,விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் மழையின் காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.