"மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது" - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 36 புதிய பேருந்துகளை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்,
இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் எளிதில் பயணிக்கக்கூடிய வகையில் மதுரை மாவட்டத்திற்கென 100 புதிய பேருந்துகளை ஒதுக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு இன்று 36 பேருந்துகளை முதற்கட்டமாக துவக்கி வைத்துள்ளோம்.
வெகு விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு அரசு நலத்திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்க உள்ளார். பட்டாவை பொறுத்தளவில் முறையாக அரசுக்கு உட்பட்டு இருக்க கூடிய இடங்கள் பட்டா கொடுத்து நேரடியாக சென்றுள்ளது. துணை முதலமைச்சர் 13,000 பட்டா கொடுத்துள்ளார். அது மக்களுக்கு உடனடியாக போய் சென்றடைந்துள்ளது.
இப்போது புதியதாக முதலமைச்சர் மதுரை வரும்போது மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு பட்டா வழங்கப்படும். உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீர்நிலை, புறம்போக்கு ஓடை, புறம்போக்கு கண்மாய், ஆகிய பகுதிகளுக்கு பட்டா வழங்கிட இயலாது மேலும் மாநகராட்சி பகுதியாக இருந்தால் ஒரு சென்ட் இடமும் அதற்கு கூடுதலாக இருந்தால் கட்டணமும் நகராட்சி பகுதியாக இருந்தால் இரண்டு சென்ட் இடமும் ஊராட்சி பகுதியாக இருந்தால் மூன்று சென்ட் இடமும் பட்டாவாக வழங்கப்பட உள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பணியை நேர்த்தியான முறையில் அனைவருக்கும் பாகுபாடு இன்றி அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நிறைவேற்ற பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடமில்லாத பகுதிகளுக்கு பட்டா அளித்ததாக வரக்கூடிய தகவல்கள் உண்மையல்ல என்றார்.
அதோடு மினி பேருந்து திட்டம் கூட முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.