#BiharFlood : தொழில்நுட்ப கோளாறால் தண்ணீரில் கவிழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர்!
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் அவசர அவசரமாக இறக்கப்பட்டது.
பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீதாமர்ஹி மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை கொண்டு சென்ற ராணுவ விமானம் தண்ணீரில் தரையிரக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அவுராய் தொகுதிக்கு உட்பட்ட நாயகன் கிராமத்தில், இந்திய விமானப் படையின் (IAF) அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீர் தேங்கிய பகுதியில் அவசரமாக இறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த உள்ளூர்வாசிகள், படகுகள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் துணை விமானி உட்பட நான்கு பேரை மீட்டனர். தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களையும் மீட்டனர்.