சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு 230 கிமீ தொலைவில் வடதிசை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 80 கி மீ வடக்கு -வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மச்சிலிபட்டணத்திற்கும் இடையே, பாபட்லாவிற்கு அருகே, கடக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 4ம் ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது..
“மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மொத்த அமைச்சரவை, நகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மீட்புப் படையினருடன் தீவிரமாக மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. அரசு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பெரிய உள்கட்டமைப்பு பாதிப்புகளை சரிசெய்ய காலம் தேவைப்படுகிறது.
எனவே இடைக்கால நிவாரண உதவியாக 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. அவசர நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழ்நாட்டின் ஆரம்ப கால நிவாரணத் தொகையாக ரூ. 5000 கோடியை உடனே மாநிலத்திற்கு வழங்க வேண்டும்” என திருச்சி சிவா பேசினார்.
மேலும் மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர்.பாலு, “ மழை வெள்ளத்தின் காரணமாக ரூ.6230 கோடி கேட்டு நேற்றைய தினம் தமிழ்நாடு அரசு மூன்று மனுக்களை அனுப்பி உள்ளது. அவற்றில் முதற்கட்டமாக 5000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோரிக்கை விடுத்துள்ளார். எனவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.