மிக்ஜாம் புயல் எதிரொலி - சீரமைப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை இயங்காது!
வண்டலூர் பூங்கா பாரமரிப்பு பணி காரணமாக நாளை பூங்கா மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் Mono-Acting | இன்பா மீது பாய்ந்தது சைபர் கிரைம் வழக்கு!
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வண்டலூர் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 30 மரங்கள் விழுந்துள்ளன. பூங்காவில் அமைந்துள்ள ஓட்டேரி ஏரி நிரம்பி வழிகிறது. 4-க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூங்காவில் இருக்கும் பணியாளர்களை கொண்டு விலங்குகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் விரைந்து வடியும் வகையில் வடிகால் வசதிகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மழை பாதிப்பு காரணமாக வண்டலூர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பூங்கா நாளை மூடப்படுவதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.