Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயல் - சில பகுதிகளில் வடியாத வெள்ள நீர்...தவிக்கும் பொதுமக்கள்!

01:46 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையில் இன்னும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement

வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மிக்ஜாம் என பெயரிடப்பட்ட இந்த புயலால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மிக்ஜம் புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது.

மேலும் இப்புயலானது தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பாபட்லா பகுதியில் தீவிர புயலாக நேற்று மாலை கரையை கடந்தது.  புயல் கரையை கடந்த நேரத்தில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது.  பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடந்ததாலும்,  வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.  இது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது.  மேலும்,  மரங்கள்,  மின் கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இருளில் தத்தளிக்கும் கொரட்டூர் :

மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு கடந்து சென்றாலும் அதன் பாதிப்புகளிலிருந்து பல பகுதிகள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.  மிக்ஜாம் புயலின் எதிரொலியாக சென்னை கொரட்டூர் பகுதியைச் சார்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முதியவர் முதல் சிறியவர் வரை தவித்து வருகின்றனர்.

மழைநீரோடு கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கொரட்டூர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,  வடக்கு,  மத்திய,  கிழக்கு நிழற்சாலைகள் பேருந்து செல்லும் சாலைகள் அதிகளவில் மழை நீர் தேங்கி உள்ளது. . பக்தவத்சலம் பள்ளி,  விவேகானந்தா பள்ளி ஆகியவற்றை சுற்றியுள்ள தெருக்களில் மழை நீர் 2 அடிக்கு மழைநீர் தேங்கி நிற்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தனித்தீவாக காட்சியளிக்கும் முடிச்சூர் : 

முடிச்சூர் சீக்கனாண் ஏரி , அடையார் ஆறு, பெருங்குளத்தூர் ஏரி ஆகியவை
நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து தாம்பரம் முடிச்சூர் சாலைகளில் ஓடுவதால்
இந்த பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.  அதிக கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து தற்போது முடிச்சூர் பகுதி தனித்தீவுபோல காட்சியளிக்கிறது.  இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கழுத்தளவு தண்ணீரில் மவுலிவாக்கம் ஜோதி நகர் பகுதி: 

சென்னை மவுலிவாக்கம் ஜோதி நகரில் கழுத்தளவுக்கு தேங்கியுள்ள வெள்ள நீர் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் குடியிருப்புவாசிகள் அவதியுற்று வருகின்றனர்.  மழை பொழிவு நின்றும் தேங்கியுள்ள மழை நீர் வடியாத நிலை உள்ளது.  200 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சரிவர உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

பள்ளிகளில் கூட மழைநீரும் கால்வாய் நீரும் கலந்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதியை கால்வாயில் அருகில் உள்ள ஆபத்தான ஒருவழி பாதையில் பொதுமக்கள் கடக்கின்றனர்.

குளம்போல் காட்சி அளிக்கும் OMR சாலை:

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இதனால் வாகன ஓட்டிகள்  கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால்,  அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெரியபாளையம் - ஆரணி சாலையில் வாகனங்கள் செல்ல தடை 

கனமழையால் திருவள்ளூர் மாவட்டம்,  ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது.  இதனால் பெரியபாளையம் - ஆரணி இடையிலான சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதேபோல ஆரணி ஆற்று வெள்ளப் பெருக்கால் பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளிவாயல் பகுதியில் ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டது.

Tags :
AavinmilkChennaiChennai rainsCycloneCyclone MichuangHeavy rainfallMichuangOrangeAlertRainTamilNaduweather forecast
Advertisement
Next Article