For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிக்ஜாம் புயல் பாதிப்பு | இடைக்கால நிவாரணம் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

10:14 AM Dec 06, 2023 IST | Web Editor
மிக்ஜாம் புயல் பாதிப்பு    இடைக்கால நிவாரணம் கோரி  பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்
Advertisement

'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் சேதங்களை சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

மழை நின்றதையடுத்து பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. இருப்பினும் சென்னையின் சில பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இதற்கிடையில் மழைப் பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் 80%க்கும் அதிகமான இடங்களில் மின் விநியோகம் சீரானது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளும் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (5-12-2023) அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திரமோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், 'மிக்ஜாம்' புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement