மிக்ஜாம் புயல் - குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு | களை இழந்த சோமவாரம்!
புயல் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த வார சோமவாரம் களை இழந்து காணப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு
திங்கட்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கணவர் நீண்ட ஆயுளோடு வாழவும், பெண்கள் திருமணம் தடை இல்லாமல் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
இதையும் படியுங்கள்: மிக்ஜம் புயல் தீவிரம் | பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் -அரசு அறிவுறுத்தல்!
இந்த ஆண்டு இன்று கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள்
அதிக அளவில் வருவது வழக்கம். மிக்ஜாம் புயல் காரணமாக அருவிகளில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வார சோமவாரம் களை இழந்து காணப்பட்டது. குறைந்த அளவில் மட்டுமே பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.
பெண் பக்தர்கள் குற்றாலநாதசுவாமி கோயில் அருகில் உள்ள அரசமரத்துடன் கூடிய செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வலம் வந்தனர். பின்னர் பிரகாரத்தில் உள்ள நாக தேவதைகளுக்கு பால், பழம், மஞ்சள் பொடி வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். மேலும் ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகளையும், ஐய்யப்ப பக்தர்களையும் ஓரமாக நின்று குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.