மிக்ஜாம் புயல் எதிரொலி | காய்கறிகளின் விலை உயர்வு -அதிர்ச்சியில் மக்கள்!
மிக்ஜாம் புயல் பாதிப்பால் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயல் கடந்த 2 நாட்களுக்கு முன் தலைநகர் சென்னையை தாக்கியது. பல வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். மழை ஓய்ந்தாலும் இன்னும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்காமல் இருக்கிறது. மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
பலர் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அரசு அவர்களுக்கு போதிய உணவு வழங்கி வருகிறது. வெள்ளம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு, முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
இந்நிலையில் கனமழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை கிலோவுக்கு சராசரியாக ரூ.10 வரை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் ரூ.55, தக்காளி ரூ.32, கத்திரிக்காய் ரூ.40, இஞ்சி ரூ.90, அவரை ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. நிலைமை சரியானதும் காய்கறி விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.