“இடதுசாரி அரசியலின் தேவையை உணர்த்துகிறது ‘விடுதலை 2’” - திருமாவளவன்!
இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து, முக்கியமான காலச்சூழலில் விடுதலை 2 வெளியாகி இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று 'விடுதலை 2' படத்தை பார்த்தார். தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
“ஒரு நுட்பமான அரசியலை அல்லது கருத்தியலை விவாதிக்கிற களமாகதான் விடுதலை பாகம் 2 இருக்கிறது. ஆதிக்கம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்; ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்; சுரண்டல் எந்த விதத்தில் இருந்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்பதை இந்த படம் தெரிவிக்கிறது. தத்துவம் மிக மிக முக்கியமானது. அதாவது கொள்கை கோட்பாடு என்று நாம் சொல்கின்ற அந்த கருத்தியல் என்பது, ஒரு அமைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
வசனங்கள் ஒவ்வொன்றும் இளைஞர்களை தட்டி எழுப்பக்கூடியவையாக, ஆழமாக சிந்திக்க தூண்டுபவையாக இருக்கிறது. தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்க முடியும்; போராளிகளை உருவாக்க முடியாது என்பதை அவர் யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை. அது இயல்பானது. உலகம் முழுவதும் பொருந்தக்கூடியது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல.
திரைப்படம் முக்கியமான அரசியலைப் பேசியுள்ளது. இடதுசாரி அரசியலின் தேவையை உணர்ந்து, முக்கியமான காலச்சூழலில் விடுதலை 2 வெளியாகி இருக்கிறது. வலதுசாரி அரசியல் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி மேலோங்கி வரக்கூடிய நிலையில் 'விடுதலை 2' திரைப்படம், இடதுசாரி அரசியல் கருத்தை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தவகையில் இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேவேளையில் இந்தப் படம் பேசியிருக்கிற அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அதிகார வர்க்கத்தை எதிர்த்து போரிடும் போது முரட்டுத்தனமான, மூர்க்கத்தனமான அணுகுமுறையாக கையாளக்கூடாது. தன்வழி அறிந்து, மாற்றான் வழி அறிந்து எந்த நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டும் என்பதை, காட்டில் நடக்கின்ற யுத்தத்தின் போது கதாபாத்திரம் பெருமாள் கூறுகிறது. இலங்கையில் நடக்கிற அதிகார வர்க்கத்தின் கொடுமையாக இருந்தாலும், மாவோயிஸ்டுகளின் களத்தில் நடக்கின்ற கொடுமையாக இருந்தாலும், அதிகார வர்க்கம் எப்பொழுதும் ஆளும் வர்க்கத்தின் பண்புகளைதான் வெளிப்படுத்தும் என்பதை இந்த திரைப்படம் காட்டுகிறது. இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தாண்டி, அம்பேத்கர் அரசியலாக, பெரியார் அரசியலாக இருக்க வேண்டும்.
இது வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல. அல்லது வணிக நோக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. சமூக பொறுப்புணர்வோடு, கருத்தியல் புரிதலோடு இளம் தலைமுறையினரை அரசியல்படுத்த வேண்டும் என்கிற வேட்கையோடு இயக்குனர் வெற்றிமாறன் படைத்திருக்கிறார். இடதுசாரி தேவை என்பது மிக மிக இன்றி அமையாதது” என தெரிவித்தார்.