மிக்ஜாம் புயல் எதிரொலி | புழல் ஏரியில் 3000 கன அடி உபரி நீர் திறப்பு!
மிக்ஜாம் புயலால் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாகவே விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே இந்த புயலை முன்னிட்டு 4 மாவட்டங்களில் பள்ளி, மாணவ, மாணவிகள் நலனை கருத்திற்கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டமும் ஒத்தி வைத்துவிட்டு, ஆன்லைன் மூலம் அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீரை வெளியேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.அதைத்தொடர்ந்து திங்கள்கிழமையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. புழல் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 8,000 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது