#Mumbai | சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் உயிரிழப்பு!
பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால். இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தார். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் ஹுட்டிங்கிற்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, மும்பை ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில் அவரது இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்ககுள்ளானது.
இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 23.
அமன் ஜெய்ஸ்வால் கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான 'தர்திபுத்ரா நந்தினி' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் அமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன், 'உதரியான்' மற்றும் 'புண்யஷ்லோக் அஹில்யாபாய்' என்ற தொடர்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
அமன் ஜெய்ஸ்வால் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக நடிகர்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.