மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி - மத்திய அரசு ஒதுக்கீடு!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
அதேபோல் மிக்ஜாம் புயல் ஆந்திராவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சூறைக்காற்று மற்றும் அதிகனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. இதனிடையே தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனை டெல்லியில் எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமரை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமித்ஷா தனது X தள பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு - மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!
புயலால் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழ்நாட்டிற்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்காக ரூ.559.29 கோடி ஒதுக்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.