மிக்ஜாம் புயல் - இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!
மிக்ஜாம் புயலால் 2 நாட்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
வங்கக் கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் சென்னைக்கு 210 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
இதனை தொடர்ந்து, மிக்ஜாம் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்தது.
தற்போது 210 கிமீ தொலைவில் விலகிச் சென்றதால் சென்னையில் மழை குறைந்துள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. மேலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று(டிச. 5) காலையில் இருந்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மிக்ஜம் புயலால் பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது.
வெள்ளம் வடிந்த சாலைகளில் உடைந்த மரக்கிளைகள், இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, மிக்ஜாம் புயலுக்கு பிறகு சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.