மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை - இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி பகுதியில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டது. மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகைக்கு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை வழங்குவதை இன்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று 17.12.2023 சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 10.00 மணிக்கு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.