மிக்ஜாம் - நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-ம் கட்ட நிவாரண பொருட்கள்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில்
2-ம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
மழையால் பதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட 4 பேரூராட்சிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில, தனியார் கல்லூரி ஆகியோரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
அவர்களால் வழங்கப்பட்ட 4.86 லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனத்தை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியத்து அனுப்பி வைத்தார். கடந்த 24 மணி நேரத்தில், ரூ.11 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் நாகை மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.