மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்பு! நாளை இரவு வரை பலத்த மழை பெய்யும்! - பாலச்சந்திரன் பேட்டி
மிக்ஜாம் புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்றும், நாளை இரவு வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பரவலாக மழை இருக்கும் ஓரிரு பகுதிகள்தான் கனமழை இருக்கும்.
இன்று இரவு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த ஆறு மணி நேரமாக புயலின் நகரும் நேரமானது குறைவாக உள்ளது. இதனால் புயல் மிகவும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆந்திரா ஒட்டியுள்ள பகுதிகளில் தான் மழை அதிகரிக்கும்.
புயல் கடக்கும் போது சென்னையில் காற்றும் மழையும் பரவலாக இருக்கும். ஒரு சில பகுதியில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்யும். பொதுவாக நாளை இரவு வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 150 முதல் 160 கிலோமீட்டர் வரை புயல் நெருங்க வாய்ப்புள்ளது. வடக்கு வட மேற்கு திசையில் தற்பொழுது புயல் நகர்ந்து வருகிறது.
மிக்ஜாம் புயலானது நாளை முற்பகல் வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலைகொள்ளும். கரைக்கு இணையாக நகர்ந்து ஐந்தாம் தேதி முற்பகல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.
இந்நிலையில், மழை அளவை பொறுத்தவரை கடந்த 12 மணி நேரத்தில் திருவள்ளுவரில் 06 சென்டிமீட்டர், சோழிங்கநல்லூரில் 7 சென்டிமீட்டர், VIT சென்னை 6 செண்டிமீட்டர், நுங்கம்பாக்கத்தில் 4 சென்டிமீட்டர், மீனம்பாக்கத்தில் 5 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.