‘மெத்தபெட்டமைன்’ போதைப்பொருள் விற்பனை... சென்னையில் தம்பதி உட்பட 6 பேர் கைது!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .
அப்போது மாதவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தீபக்(27) என்பவர், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் அவரைப் பிடித்து விசாரித்ததில், பிரிண்டிங் தொழில் செய்து வரும் இவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவரது மனைவி டோலி மேத்தாவையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தீபக் அளித்த தகவலின் பேரில், அவரது நண்பர் வியாசர்பாடி முல்லை நகர் பகுதியை
சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.370 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் கைது செய்த அரும்பாக்கம் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜீனத் என்பவரிடம், ஒரு கிராம் மெத்தபெட்டமைனை 2000 ரூபாய்க்கு வாங்கி, அதை 4000 ரூபாய்க்கு விற்பேன் என தீபக் தெரிவித்துள்ளார். தன்னுடைய பிரின்டிங் பிரசில் பணியாற்றும் முத்துக்குமாரை போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக, கடந்த மார்ச் மாதம் வியாசர்பாடி போலீசாரால் தீபக் கைது செய்யப்பட்டவர் என அரும்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். ஜீனத்தை கைது செய்தால், போதைப் பொருள் விற்பனை கும்பலின் நெட்வொர்க்கை முடக்கி
விடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதேபோல் அயனாவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மெத்தபெட்டமைன் வைத்திருந்த பாலசண்முகம், அருண் லக்ஷ்மணன், ரஞ்சித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.