அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் வரும் 26ம் தேதி திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் வரும் 26 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதன் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் ஜிலேபி | திகைத்துப் போன ஆனந்த் மஹிந்திரா!
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;
"நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன் கலைஞர். அவரின் நினைவிடம் முழுமை அடைந்திருக்கிறது. தலைவரை உருவாக்கிய தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணா அவரின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கலைஞருடைய நினைவிடமும் புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் நினைவிடம் வருகிற 26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதை விழாவாக கொண்டாட விரும்பவில்லை, நிகழ்ச்சியாகவே கொண்டாட விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.