மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!
மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டு
நிகழ்ச்சியில் சீறிபாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 8 மாடுபிடி வீரர்கள்
காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மணப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்யப்பட்ட , மதுரை, சிவகங்கை, மேலூர்
மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 15 காளைகளும், தலா
9 பேர் கொண்ட 15 மாடுபிடி வீரர்கள் குழுவினர் கலந்து கொண்டு சீறிவரும் காளைகளை அடக்க முற்பட்டனர்.
காளைகளை பெரிய கயிற்றால் அரை மணிநேரம் மைதானத்தில் கட்டி
விடுவர். அதனை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குறிப்பிட்ட 25 நிமிடங்களுக்குள்
அடக்கினால் மாடுபிடி வீரர்கள் வெற்றியாகவும், இல்லையென்றால் காளை
வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும், இதுவே வடமாடு மஞ்சுவிரட்டுவின்
விதிமுறையாகும்.
போட்டியின் தொடக்கத்தில் பங்கேற்ற காளைகளுக்கு மரியாதை செய்தனர். வடமாடு மஞ்சுவிரட்டு தொடங்கிய பின் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முயன்றனர். இதில் காயமடைந்த சுமார் 8 பேரை சிகிச்சைக்காக நிறுத்தி வைகப்பட்டிருந்த
ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்போட்டியின் இறுதியில் சிறந்த காளைக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு , தங்கம் நாணயம், வெள்ளி நாணயம், குத்துவிளக்கு, கட்டில், உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. இதனை காண ஏராளமாக இளைஞர்கள் வந்திருந்தனர்.