மலையடிப்பட்டி உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி - பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு!
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் நடைபெற்ற புனித தோமையார் திருமலைத் பேராலயத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் பேராலயத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்காவும், உயிர்ப்பு பாஸ்காவும் நடைபெற்றது. இதையடுத்து மூன்றாம் நாளான நேற்று நள்ளிரவு திருமலையிலிருந்து தாரைத் தப்பட்டைகள் முழங்க ரத பவனியாக சென்ற தோமையார், சவேரியார் ஆலயம் அமைந்துள்ள நடு வீதியில் உயிர்த்த ஆண்டவரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின் உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் ரதங்கள் முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து புனிதர்களான ஆரோக்கியமாதா, அருளானந்தர், செபஸ்தியார், வீரமாமுனிவர், பனிமய மாதா, சவேரியார், சூசையப்பர், அந்தோனியார், வியாகுல மாதா, லூர்து மாதா, ஜெபமாலை அன்னை என 11 ரதங்களின் புனிதர்கள் பின் தொடர, ஊரின் முக்கிய வீதிகளில் ரதங்கள் பவனி சென்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்டம், நேற்று மாலை நடைபெற்றது. தேர் மலையடிப்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் தேரை வரவேற்றனர். நகர் உலா வந்த பெரிய தேர் மீண்டும் தேரடிக்கு வந்து நிலைகொண்டது. இந்நிகழ்ச்சியில் மலையடிப்பட்டி பங்கு சார்ந்த மலைதாதம்பட்டி, ராயம்பட்டி, புதுப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, பிச்சமணியாரம்பட்டி, தெற்கு அஞ்சல்காரன்பட்டி உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.