For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியா-சீனா இடையே புதிய எல்லை ஒப்பந்தம்! நிரந்தர தீர்வு கிடைக்குமா?

06:49 AM Oct 24, 2024 IST | Web Editor
இந்தியா சீனா இடையே புதிய எல்லை ஒப்பந்தம்  நிரந்தர தீர்வு கிடைக்குமா
Advertisement

ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

Advertisement

5 ஆண்டுக்குப் பிறகு இரு தலைவர்கள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்திருப்பது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனாவுடன் 3,488 கிமீ எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இதில், இரு நாடுகளுக்கும் இடையே பல பகுதிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், இதுவரை முழுமையான எல்லை நிர்ணயிக்கப்படவில்லை. இதன் காரணமாக எல்லையில் ரோந்து பணியின் போது இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. இப்பிரச்னையை தீர்க்க இரு தரப்பிலும் சிறப்பு பிரதிநிதிகள் நியமித்து நீண்ட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பயனாக, கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவங்கள் ரோந்து செல்ல ஒப்பந்தம் ஏற்பட்டது. இது லடாக் எல்லையில் 2020க்கு முந்தைய நிலை தொடர்வதை உறுதிபடுத்தி உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றார். நேற்று நடந்த மாநாட்டில் பங்கேற்ற மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இது 5 ஆண்டுக்குப் பிறகு இரு தலைவர்களும் நடத்தும் முறைப்படியான இருதரப்பு பேச்சுவார்த்தை. கடைசியாக கடந்த 2019ல் மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் சந்தித்து பேசினர். சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து செல்வதற்கான ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

இருதரப்பு சிறப்புப் பிரதிநிதிகள் எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதிலும், எல்லையில் அமைதியைப் பேணுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும், அடுத்த சிறப்பு பிரதிநிதிகளின் கூட்டத்தை பொருத்தமான தேதியில் நடத்த வேண்டுமெனவும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். முதிர்ச்சி மற்றும் விவேகத்துடன், பரஸ்பர மரியாதை காட்டுவதன் மூலம், இந்தியாவும் சீனாவும் அமைதியான மற்றும் நிலையான உறவைப் பெற முடியும் என்றும், எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது, இருதரப்பு உறவை இயல்பாக்குவதற்கான பாதையை நோக்கி நகர்த்தும் என்றும் மோடி, ஜின்பிங் வலியுறுத்தினர்.

மேலும் இருதரப்பு உறவை நீண்ட கால கண்ணோட்டத்தில் முன்னேற்ற வேண்டும் என்றும், தகவல் தொடர்புகளை மேம்படுத்தி, சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், ‘‘இந்தியா-சீனா இடையேயான உறவு நமது இரு நாடுகளுக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டும்’’ என்று கூறி உள்ளார். இதே போல, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

Tags :
Advertisement