For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி” - 🛑 நியூஸ்7 தமிழ் சிறப்பு நேரலையில் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம்!

07:13 AM Apr 22, 2024 IST | Web Editor
“பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி”   🛑 நியூஸ்7 தமிழ் சிறப்பு நேரலையில் மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம்
Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. நியூஸ்7 தமிழ் சிறப்பு நேரலையில் திருத்தேரோட்டம் ஒளிபரப்பப்பட்டது. 

Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான நேற்று (ஏப். 21) திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற திருமணமான பெண்கள் புதிய மாங்கல்யக் கயிறு அணிந்து கொண்டனர்.

உற்சவம் நிறைவடைந்த பிறகு, அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மனும், யானை வாகனத்தில் சுவாமியும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். திருக்கல்யாண விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

சித்திரை திருவிழா 11-ம் நாள் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.  திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தேரடியில் உள்ள கருப்பண்ணசாமி கோயில் முன்பாக எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  57 அடி உயரம் கொண்ட தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை உடன் எழுந்தருளினார். 45 அடி உயரம் கொண்ட தேரில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.

மிகக்கோலாகலமாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது.  தேரடியில் இருந்து தேர்களை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.  பஞ்ச வாத்திய இசை முழக்கத்துடன் இளைஞர்கள் ஆரவாரத்துடன் தேர்களை இழுத்தனர். பெரிய தேரில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும், சிறிய மீனாட்சி அம்மணும் எழுந்தருளினர். தேரோட்டத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

தேரோட்டம் நிறைவு

காலை 6.30 மணிக்கு தொடங்கிய திருத்தேரோட்டம் பிற்பகல் 1 மணிக்கு நிறைவு பெற்றது.  சுந்தரேஸ்வரர் பிரியாவிடை உடன் எழுந்தருளிய தேரும்,  மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரும் தேரடிக்கு வந்தடைந்தன.  6 மணி நேரத்திற்கு மேலாக நான்கு மாசி வீதிகளில் இரண்டு தேர்களும் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டன.

சித்திரைத் திருவிழாவின் திருத்தேரோட்டத்தை நியூஸ்7 தமிழின் சிறப்பு நேரலையில் காண:

Tags :
Advertisement