டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ சிகிச்சை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, மருத்துவர்கள் பற்றாக்குறை போன்றவற்றிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு சமயங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஜெனரேட்டர்கள் மற்றும் போதிய டாக்டர்கள் வசதியோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தி.மு.க. அரசு தள்ளியிருப்பதாக இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி, ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
திமுக ஆட்சியில் முதலமைச்சரோ மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.