”மதிமுக 'மகன் திமுக'வாக மாறிவிட்டது”- மல்லை சத்யா கடும் விமர்சனம்!
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியிலிருந்து இன்று நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது,
”மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) 'மகன் திமுக'வாக மாறிவிட்டது. "ஏற்கனவே தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு போலியான விசாரணை நாடகம் நடைபெற்றது. த ற்காலிக நடவடிக்கை என்பது வேடிக்கையாக உள்ளது"
மேலும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வைகோ கூறியதை மறுத்த மல்லை சத்யா, மதிமுகவில் அப்படியொரு குழுவே இல்லை. "இடைக்கால நடவடிக்கை எடுத்தபோது அந்தக் குழு எங்கே சென்றது? தனது மகனுக்காக வைகோ இந்த இயக்கத்தை பாழ்ப்படுத்திவிட்டார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், தான் மதிமுகவிலிருந்து விடுதலை பெறவில்லை 'மகன் திமுக'விலிருந்துதான் விடுதலை பெற்றுள்ளேன். "வைகோ திமுகவிலிருந்து விலகிய போது அண்ணா அறிவாலயம், உதயசூரியன் சின்னம் எல்லாம் தனக்கு சொந்தம் என்றுகூறினார். ஆனால், நாங்கள் மதிமுக எங்களுடையது என்று சொல்லவில்லை. இனி சுதந்திரமாகச் செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், துரை வைகோ தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய ராணுவத்தில் இந்திய மாணவர்கள் பணிபுரிவதாக, பாஜகவினரிடம் கையெழுத்து வாங்கி துரை வைகோ பேசியது மிகப்பெரிய குற்றம் எனவும், அவர் பாஜகவுடன் 'கள்ள உறவில்' இருப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் மதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைப்பதற்கான அறிவிப்புகள் வெளிவரலாம் என்றும் மல்லை சத்யா கூறினார்.
மேலும், செப்டம்பர் 15 அன்று வரும் அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளைக்
கொண்டாட இருப்பதாகவும், அன்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுப்பதாகவும் கூறினார்.