லேட்டா வந்த மேத்தியூஸ்: டாட்டா காட்டிய நடுவர்கள்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் ஒவ்வொரு பேட்டருக்கும் வார்னிங் அலர்ட்டை கொடுத்துள்ளது. இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான ஆஞ்சிலோ மேத்தியூஸ் ஒரு பந்து கூட அட்டண்ட் செய்யாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தது தான் சுவாரஸ்யமே....
அதெப்படி...? ஒரு பேட்டர் களத்திற்கு வந்தவுடன் ஒரு பந்துகூட பிடிக்காமல் அவுட் ஆக முடியுமா என்ன? என கேட்டால் நிச்சயம் முடியும்! ஆனால் களத்திற்கு வருவதற்கு முன்னதாகவே தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஆஞ்சிலோ மேத்தியூஸ். சரியாக 24.2 ஆவது ஓவரில் இலங்கை அணியின் செட்டில்ட் பேட்டர் சதீரா சமரவிக்ரமா, 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக உள்ளே வர வேண்டிய பேட்டர் ஆஞ்சிலோ மேத்தியூஸ் தான். ஆஞ்சிலோ மேத்தியூஸ் களத்திற்குள் வந்தார். ஆனால் அவருடைய ஹெல்மெட்டில் கட்டப்படும் ஸ்ட்ராப் பகுதி அவருக்கு அசவுகரியத்தை கொடுத்ததால், களத்தில் கார்ட் கூட எடுக்காமல் மீண்டும் வேறு ஹெல்மெட் எடுத்து வருவதற்காக காத்திருந்துள்ளார். ஆனால் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஐசிசியின் விதியை மறந்த மேத்தியூஸ், இந்த தாமதத்திற்கு வெகுமதியாக தனது விக்கெட்டை ஒரு பந்துகூட பிடிக்காமல் இழந்தார்.
மேத்தியூசின் தாமதத்தை சுதாரித்துக்கொண்ட ஷாகிப் அல் ஹசன், நடுவரிடம் ஐசிசியின் டைம் அவுட் விதிமுறைப்படி பேட்டருக்கு அவுட் கொடுக்கச் சொல்லி கேட்டதால், எதிரணியின் கேப்டன் அப்பீல் செய்ததை அடுத்து நடுவரும் மேத்தியூஸ்க்கு அவுட் கொடுத்தார். அதென்ன டைம் அவுட் விதி...
அதாவது ஐசிசி விதிகள் 1980 இன் படி, ஒரு பேட்டர் அவுட் ஆகி களத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து, மற்றொரு பேட்டர் 3 நிமிடங்களுக்கு உள்ளாக விளையாட வந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்ய தவறி காலத் தாமதம் ஏற்பட்டால், உடனடியாக அந்த பேட்டருக்கு டைம் அவுட் விதியின் படி, நடுவர் அவுட் கொடுக்க வேண்டும். இதனை சூசகமாக பயன்படுத்திக் கொண்ட ஷாகிப் அல் ஹசன், மேத்தியூஸ் காலத் தாமதம் செய்ததை பயன்படுத்தி சாமர்த்தியமாக அவரது விக்கெட்டை எடுத்து விட்டார் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை ஆடும் ஒரு வீரருக்கு, இதுபோன்ற அடிப்படை விதியானது நிச்சயம் தெரியும். இந்த அடிப்படை விதியை பின்பற்றுவதே, கிரிக்கெட் விளையாட்டின் ஒழுங்குமுறையை பின்பற்றுவதற்கு சமம். மேத்தியூஸ் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இத்தகைய அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவர் இவ்வாறு விதியை பின்பற்றாமல் இருந்ததும், ஷாகிப் அல் ஹசன் அதனை பயன்படுத்திக் கொண்டதும் கிரிக்கெட்டின் மற்றும் ஒரு சகஜமான நிகழ்வாகி விட்டது.
இவைகளையெல்லாம் தாண்டி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுபோன்று நடந்து, ஒரு பேட்டர் அவுட் ஆனதும், அதிலும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு சம்பவத்தால் ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி வெளியேறியதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் மேத்தியூஸ் மட்டுமே!
– நந்தா நாகராஜன்