3-வது பதக்க வாய்ப்பை தவறவிட்டார் மனு பாக்கர்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 4 ஆம் இடம் பிடித்து 3வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி இந்தியாவிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று கொடுத்தது. மேலும், ஆண்களுக்கான 50மீ ஏர் ரைபிள் 3பி பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 25மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் போட்டியிட்டார். இதில், முதல் எலிமினேஷனில் 6ஆவது இடம் பிடித்த மனு பாக்கர், 2ஆவது எலிமினேஷனில் 3ஆவது இடம் பிடித்தார்.
இதையடுத்து 3ஆவது எலிமினேஷனில் 2ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார். 4ஆவது எலிமினேஷனில் 2ஆவது இடத்தில் இருந்தார். கடைசியாக 28 புள்ளிகள் பெற 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன் மூலமாக 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து தொடரிலிருந்து வெளியேறினார். மேலும், ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்தார்.
போட்டி முடிந்த பிறகு மனு பாக்கர் பேசுகையில், "நான் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தற்போது நான் இதில் 4வது இடத்தைப் பிடித்ததால் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எங்களுக்கு நேரம் ஒதுக்கி எங்களை ஊக்கப்படுத்தினார்" என்றார்.