இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்! மாநிலங்களவை உறுப்பினராக 33 ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை!
மாநிலங்களவையில் 33 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஓய்வு பெறுகிறார்.
1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்மராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங். அப்போது அவர் மத்திய நிதியமைச்சராக பதவியேற்று இருந்தார். 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். 91 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டு கால மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.
இந்நிலையில் ஓய்வுபெறும் மன்மோகன் சிங்குக்கு பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
Dr Manmohan Singh retired from Rajya Sabha yesterday after 33 years. He was always a dignified presence in and out of parliament, never rushed into the well of the house, never raised his voice in anger but always made his point with no theatrics. The scholarly Dr Singh was never…
— Rajdeep Sardesai (@sardesairajdeep) April 3, 2024
“டாக்டர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் எப்போதும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கண்ணியமான மனிதராக இருந்தார். ஒருபோதும் கோபத்தில் குரல் எழுப்பியதில்லை. ஆனால், எப்போதும் தனது கருத்தை எந்த நாடகமும் இல்லாமல் தெளிவாக எடுத்துரைப்பார். மன்மோகன் சிங் ஒருபோதும் ஒரு வெகுஜன அரசியல்வாதி அல்ல: அவர் போட்டியிட்ட ஒரே லோக்சபா தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் இரண்டு தலைமுறைகள் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது. நன்றி டாக்டர்.. வரலாறு உங்களை எப்போதும் நினைவுகூறும்” என குறிப்பிட்டுள்ளார்.